காதல் நினைவுகள்
Tuesday, October 30, 2007 | Labels: காதல் நினைவுகள் | |காதல் நினைவுகள்
எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும் அந்த பசுமையான நினைவுகள் என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது. அறக்க, பறக்க திரியும் தற்போதைய, இந்த இயந்திரமான வாழ்க்கையில், என்னையும் அறியாமல் என் எண்ண ஓட்டங்களில் அந்த நினைவுகள் அவ்வப்போது வந்து போவதுண்டு. ஏன் என்று எனக்குள் நான் பல முறை கேட்டதும் உண்டு. வரும் பதில் ....மாற்றங்களும், மறதியும் நிறைந்த மனித வாழ்க்கையில் அது மட்டும் மறக்க முடியாத பருவமடா.
பள்ளி படிப்பு முடிந்தது. இனி கல்லூரி... படிக்க தேவையில்லை, கிளாஸை கட்டடித்து விட்டு சினிமாவிற்கு போகலாம், என எண்ணற்ற கற்பனைகளோடும், கனவுகளோடும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன். மிஞ்சியது ஏமாற்றமே. கல்லூரியில் உள்ள துறைகளில் மிகவும் கண்டிப்பான துறையில் எங்கள் துறை முதலிடம். தலைமுடி கொஞ்சம் அதிகமாக இருந்தால் துறை தலைவரே முடியை வெட்டி விடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சற்று ஆறுதலான விஷயம். மொழி பாடங்களுக்குகான வகுப்புகள் பொருளாதார துறையுடன் இணைந்து நடப்பது. அங்கு தான், நான் என்னவளை பார்த்தேன். இப்போது நான் அவ்வாறு சொல்வது சரியல்ல. அதற்கான விடை முடிவில் உங்களுக்கே தெரியும். அழகாயிருந்தால், ஆரவாரமிருக்கும். அறிவிருந்தால் ஆணவமிருக்கும் என, என் அடிமனதில் இருந்த எண்ணம் அவளை பார்த்தவுடன் தூள் தூளானது. அமைதி, அடக்கம், அழகு, அறிவு என பல பண்புகளை ஒருசேர தன்னகத்தே கொண்டிருந்தாள்.
இதுவே என் பார்வை அவள் மீது விழக்காரணம். அவளை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். அவள் வீடருகே உள்ள கடை ஒன்றில் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். அதேபோல், அவளது குடும்பம், குடும்பச் சூழல், அவளுக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, ஏன் அவ்வளவு... குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் என்றே சொல்லலாம். ஆனால் ஒன்றை தவிர.
அவள் விரும்பும் நடிகர், என் தலைவன் ஆனான். அவள் வரும் பாதையே என் பாதையானது. இப்படியே என் கல்லூரி பருவம் ஓராண்டு உருண்டோடிய நிலையில் நான் அவளை விரும்புவது அவளுக்கு தெரியவந்தது. எனினும், எந்தவித கருத்து பரிமாற்றங்களோ, எண்ணப்பரிமாற்றங்களோ எங்களுக்குள் இல்லை. ஓரிரு புண்சிரிப்புகள் மட்டுமே சிந்துவாள், அந்த நாளில் என் கால்கள் தரையில் படாது.
ஒவ்வொரு நாளும் என்னென்ன கலரில், எந்த வகையான உடை அணிந்து வருகிறாள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வேன். அவளிடம் எத்தனை டிரஸ் இருக்கிறது என்று எண்ணிடம் என் நண்பர்கள் கேட்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவள் வந்து என்னிடம் பேசுவாள் என்று. அந்த மூன்று வார்த்தை, அதற்காக நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று எனக்கு தெரியாது. அவள் சென்ன அந்த மூன்று வார்த்தை ஹேப்பி நியூ இயர். அந்த வருஷம் நான் கொண்டாடிய புத்தாண்டை என்னால் என்றும் மறக்க முடியாது.
காலங்கள் கடந்தன. கிட்டதட்ட என் கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டுகள் போகிவிட்டன. ஓரிரு வார்ததைகள் மட்டுமே பேசிய நிலையில் எப்படி என் காதலை அவளிடம் போய் சொல்வதென்று மனதுக்குள் குழப்பம். வீட்டில் பலமுறை சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவளை பார்த்தவுடன் வார்த்தைகள் வருவதில்லை. அதற்கும் மேல் என்னால் காதலை சொல்லாமல் இருக்க முடியவில்லை. உண்டா , இல்லையா என்று கேட்டுவிட மனசு துடித்தது.
அந்த நாளும் வந்தது. எனக்கு ரொம்பப் பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரில் அவள் அன்று கல்லூரி வந்திருந்தாள். மஞ்சள் கலர் சுடிதாரில் அன்று ரொம்ப அழகாக இருந்தாள். அன்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்தது. அவள் கிளம்பும் முன்பே நான் கிளம்பி விட்டேன். அவள் வரும் பாதையில் அவளுக்காக காத்திருந்தேன். அன்று இந்தியா - ஆஸ்ட்ரேலியா விளையாடிய ஷார்ஜா கோப்பை கடைசி போட்டி. போட்டியை காண வீட்டில் எனக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.
ஆனால்... நானோ அவள் வரும் பாதையில்... அவளும் வந்தாள். பொய்யான பெயரில் தான் அழைக்கிறேன். ரம்யா ஒரு நிமிஷம். உங்கிட்ட பேசனும். என்ன அலெக்ஸ் இங்க நிக்கிற. உன்கிட்ட பேசனும் ரம்யா. என்ன சொல்லு. ரம்யா நான் உன்ன லவ் பண்ணுரேன். ஐ.லவ்.யூ ரம்யா. இரண்டு நிமிஷம் மவுனமாக இருந்தாள். என்ன வார்த்தை அவள் வாயில் இருந்து வரும் என, என் எண்ண ஓட்டங்கள் அலைபாய்ந்தன. மனதுக்குள் குலதெய்வம் எல்லாம் வந்து போனது.
அவள் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. நான் எதிர்பார்க்காத வார்த்தை. "நீ அண்ணன் மாதிரி" .....
என்றும் அன்புடன்